தனி சிறப்பு பாதுகாப்பு அறையில் தேசபந்து!
அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கண்டியில் உள்ள தும்பர போகம்பரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 3 ஆம் தேதி மாத்தறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரை சிறையில் உள்ள தனி பாதுகாப்பான அறையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
சந்தேக நபரான தேசபந்து தென்னகோன், மாத்தறை, கொட்டவில நீதிமன்றத்திலிருந்து போகம்பரை சிறைச்சாலைக்கு ஆயுதமேந்திய சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன்போது, சந்தேகநபரை பாதுகாப்பாக கொண்டு செல்லவும், சிறையில் சிறப்பு பாதுகாப்பில் வைத்திருக்கவும் மாத்தறை சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, தேசபந்து தென்னகோன் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி வழக்கறிஞர் ஷானக டி சில்வா, தேசபந்துவின் காலத்தில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததால், அவரது பாதுகாப்பை பலப்படுத்துமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
சிறப்பு பாதுகாப்பு
இதேவேளை, அரசு தரப்பு சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சந்தேக நபரான தேசபந்து தென்னேகோனை சிறப்பு பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்படுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறைச்சாலை தலைமையகத்தின் அறிவுறுத்தலின்படி, சந்தேக நபர் போகம்பரை சிறையில் சிறப்பு பாதுகாப்பில் தடுத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்