ஆறு மாதங்களாகியும் இழுத்தடிக்கப்படும் கபில சந்திரசேனவின் மருத்துவ அறிக்கை
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வழக்குகளுக்குரிய அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் மிகக் குறுகிய காலத்தில் வழங்கப்படும் நிலையில், நாட்டின் முக்கிய வழக்குகளுக்குரிய அறிக்கைகள் மாதக்கணக்கில் தாமதப்படுத்தப்படுவதாக 'இலங்கை காவல்துறையை அரசியலிலிருந்து விடுவிக்கும் தேசிய கூட்டமைப்பின்' தலைவர் அஜித் தர்மபால குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது இணையத்தள காணொளி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் மூன்றரை கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான "குடு பொடி" என்பவரின் வழக்குக்குரிய அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கை இரண்டரை மாதங்களுக்குள் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கபில சந்திரசேன உயிரிழப்பு
பொதுவாக பாரிய அளவிலான போதைப்பொருள் வழக்குகளின் அறிக்கைகள் வெளிவர ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடங்கள் வரை தாமதமாகும் நிலையில், குறித்த நபருக்கு மட்டும் இவ்வளவு விரைவாக அறிக்கை வழங்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதேவேளை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கடந்த மே மாதம் 8 ஆம் திகதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கை, ஆறு மாதங்கள் கடந்தும் இதுவரை வழங்கப்படவில்லை.
கோட்டை பிரதான நீதவான் பசன் அமரசேன அவர்கள் குறித்த அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு பல தடவைகள் உத்தரவிட்ட போதிலும், இதுவரை அறிக்கை வழங்கப்படாததால் மரணத்திற்கான காரணத்தை கூட அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தாமதங்கள் முக்கிய வழக்குகளின் விசாரணைகளைப் பாதிக்ககூடும் என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |