இந்திய சிறையில் இருந்து விடுதலையான இலங்கை கடற்றொழிலாளர்கள்! விடுதலை ஆகி பல மாதம் ஆகியும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவலம்
கடந்த வருடம் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையின் மன்னார் பிரதேச கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு அவர்களின் உறவினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வருடம் தலைமன்னார் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற தலைமன்னார் கிராமம் பகுதியை சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள் இயந்திர கோளாரு காரணமாக இந்திய கடற்பகுதியில் சிக்கிய நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் இந்திய கடலோர காவற்படை மேற்கொண்ட விசராணையின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் முன்னர் இவர்கள் இயந்திர கோளாரின் காரணாமாகவே கரை ஒதுங்கியுள்ளனர் என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
சிறப்பு முகாம்
இருப்பினும் விடுதலை செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இரு கடற்றொழிலாளர்களும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தற்போது சிறப்பு முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளதாக இரு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள் எமது பகுதியில் சட்ட விரோத கடற்றொழிலில் ஈடுபட்டு எமது வளங்களை அழிக்கும் போதும் மற்றும் கைதாகும் போதும் எமது மக்களும் அரசாங்கமும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும் போது இந்திய அரசாங்கம் மாத்திரம் சிறையில் பல மாதங்கள் வைத்திருப்பதும் மற்றும் சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் சிறப்பு முகாம்களில் வைத்திருப்பதும் தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும் இரு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழில்
இந்த நிலையில், குறித்த இரு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இவ்வாறு குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் வினவிய போது, இது தொடர்பில் தன்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் இந்திய பிரதிநிதிகளிடம் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்திய சிறைச்சாலைகளில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை தொடர்பிலும் அங்கு கையகப்படுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் தான் தொடர்ந்து பேசி கொண்டிருப்பதாகவும் விரைவில் இரு கடற்றொழிலாளர்களையும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை இடம்பெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |