டயானா கமகேவிற்கு புத்திக்குறைபாடு - முன்னாள் அரச தலைவர் விசனம்
அரச தலைவரின் பதவிக்காலத்தை மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு(diana-gamage) ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என்று தான் கருதுவதாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால(Maithiripala Sirisena) சிறிசேன தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக நாட்டுமக்களுக்கு சேவையாற்ற முடியாதுபோன இருவருடகாலத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்தைப் பயன்படுத்தி, அரசதலைவரின் பதவிக்காலத்தையும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தையும் மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கவேண்டும் என நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே சபையில் யோசனையொன்றை முன்வைத்தார்.
அவரது யோசனையின் பிரகாரம் அரச தலைவரதும் நாடாளுமன்றத்தினதும் பதவிக்காலம் நீடிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அபிப்பிராயம் தொடர்பில் முன்னாள் அரசதலைவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
டயானா கமகேவிற்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. அரச தலைவரின் பதவிக்காலத்தை மேலும் இருவருடங்களால் நீடிக்கவேண்டும் என்று டயானா கமகே கூறினாலும், இவ்விடயத்தில் அரச தலைவரின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? அவர் இதற்கு உடன்படவேண்டும் அல்லவா? அரச தலைவர் இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருப்பதாக நான் கருதவில்லை.
அதுமாத்திரமன்றி எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் இதற்கு முன்னரொருபோதும் அரச தலைவர் பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்ததால் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
நான் அரச தலைவராக இருந்தபோது எனது பதவிக்காலத்தைக் குறைத்துக்கொண்டேன். அந்தவகையில் வேறு எந்தவொருஅரச தலைவரும் தமது பதவிக்காலத்தை மீண்டும் அதிகரித்துக்கொள்வதற்கு முற்படுவார்கள் என்று நான் கருதவில்லை என்று குறிப்பிட்டார்.
