யாழில் சிறுமிக்கு நேர்ந்த துயரம் - பரிதவிக்கும் பெற்றோர்
யாழில் டெங்கு
யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி இன்றையதினம் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா என்ற வயது 5 சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமிக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.நேற்றுமுன்தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
சிறுமி உயிரிழப்பு
எனினும், அன்றைய தினம் இரவு சிறுமிக்கு காய்ச்சலும், வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
காய்ச்சல் ஏற்பட்டால் நேரடியாக அருகில் உள்ள அரச மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்
