தேசபந்துவின் வீட்டில் மறைந்திருந்த துப்பாக்கிதாரிகள்! விசாரணையில் அதிர்ச்சி
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அம்பலாங்கொடை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிரான் கோசல டி சில்வா எனப்படும் தொழிலதிபரின் கொலையுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பதுங்கியிருந்த வீடு முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கரந்தெனிய சுத்தாவால் கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டி, அம்பிட்டிய பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ள நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இவ்விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
கரந்தெனிய சுத்தா மூலம் தனது மனைவியின் பெயரில் ஹசலக பகுதியில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென் மாகாணத்தில் இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான நீண்டகால பகை காரணமாக கோசல டி சில்வா கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தொழிலதிபர் கோசல மீது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதியன்று ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்றதற்காக கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று கூர்மையான ஆயுதங்களால் அடித்து மற்றொரு நபரைக் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பாதாள உலகக் குழு
கரந்தெனிய சுத்தா, கொஸ்கொட சுஜி மற்றும் பொடி லெஸ்ஸி ஆகிய பாதாள உலகத் தலைவர்களுடன் ஹிரான் கோசலவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பூஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தென் மாகாணத்தின் பிரபல பாதாள உலகத் தலைவரான லொகு பெட்டியுடன் அவர் சுமார் ஒரு மணித்தியாலம் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
லொகு பெட்டி தரப்புடன் சிறிது காலமாக முரண்பட்டு வந்த கோசல, அண்மையில் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 22 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் அம்பலங்கொடை நகரில் அவர் பணிபுரிந்த கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர்.
துப்பாக்கித்தாரிகள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் குருந்துவத்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கொலைக்குப் பின்னால் கரந்தெனிய சுத்தாவின் தரப்பு அல்லது லொகு பெட்டியின் தரப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |