இலங்கையின் நிலை தொடர்பில் சங்கா ஆதங்கம்
இலங்கை 21 மில்லியன் மக்கள் வாழும் நாடு என்கிற போதிலும், அதனை 226 பேர் மட்டுமே அழித்து விட்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், குடும்ப ஆட்சியை கொண்டு செல்வதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் குமார் சங்கக்கார வலியுறுத்தியுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக உள்நாட்டில் நடத்தப்பட்டு வரும் எதிர்ப்பு போராட்டங்கள் 10 நாட்களைக் கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மக்கள் போராட்டங்களுக்கு அரசியல் பிரபலங்கள் மட்டுமன்றி, ஏனைய துறைகளின் பிரபலங்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில் கலந்து கொண்ட குமார் சங்கக்கார, இலங்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களே அழித்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாம் அனைவரும் தெரிவு செய்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை கொண்டுள்ளதாகவும், மோசமான நிதி நிர்வாகத்தை முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த மக்களை உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு சென்றமை தொடர்பில், சிறிதளவு கூட கவலை அடையவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
தேசிய அல்லது இடைக்கால அரசாங்கம் பற்றிய பேச்சுக்கள் இருப்பதாக கூறிய அவர், நெருக்கடிகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
ஊழலுக்கும், உறவினர்களுக்கு பதவிகளை வழங்குவது மற்றும் குடும்ப ஆட்சியை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கக் கூடாது எனவும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
