சிறிலங்காவில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் அபாயம்
சிறிலங்காவில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் அபாயம் தலைதூக்கி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் அரங்கறிய இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகம் சர்வதேச விசாரணை ஒன்றை இனியும் கோராது விட்டால், எஞ்சியிருக்கின்ற தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விடும் அபாயம் ரணில் ராஜபக்சவினுடைய ஆட்சியில் தலை தூக்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட தாக்குதல்
இன்றைய தினம்(17) திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவூர்தி மீதும் வாகன பேரணியில் பங்கேற்றவர்கள் மீதும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள பௌத்த பேரினவாதமும் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் அரச இயந்திரமும் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு தாக்குதலாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
ஏனென்றால் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் பார்த்துக் கொண்டிருக்க தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
நேற்றைய தினத்திலிருந்து(16) தொடர்ச்சியாக பல்வேறுப்பட்ட அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தான் இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை
இன்று தமிழர் தாயகத்தில் மீண்டும் தமிழினத்தை அழிக்கின்ற கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தீவிரம் பெற்றிருக்கிறது.
ஆகவே சர்வதேச சமூகம் இனியும் கால தாமதம் இன்றி இந்த இன அழிப்பிற்கு - இனப்படுகொலைக்கு, தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த அட்டூழியங்களுக்கு உடனடியாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.
இல்லையென்றால் மிஞ்சி இருக்கின்ற தமிழினமும் இந்த நாட்டிலே முற்றாக அழிக்கப்பட்டு துடைக்கப்பட்டு விடும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.