இஸ்ரேலுக்கு அழிவுகரமான ஆயுதங்களை வழங்கும் ஜோ பைடன்: அமெரிக்காவில் வலுக்கும் எதிர்ப்பு
இஸ்ரேலுக்கு அழிவுகரமான, நியாயமற்ற ஆயுதங்களை ஜோ பைடன் நிர்வாகம் வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமெரிக்க வெளிவிவகார அதிகாரி ஒருவர் தமது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலால் காசா பகுதியில் இதுவரை 3,700 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே அந்த அதிகாரி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
Josh Paul என்ற அந்த மூத்த அதிகாரி அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், ஜோ பைடன் நிர்வாகம் அவசர அவசரமாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அள்ளித் தருவது என்பது குறுகிய நோக்குடையது, நியாயமற்றது, இதனால் பேரழிவு மட்டுமே ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கான இராணுவ உதவி
மேலும், நாம் பகிரங்கமாக ஆதரிக்கும் மதிப்புகளுக்கு முரணான நடவடிக்கை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இருப்பினும் ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலை கடுமையாக விமர்சித்த அவர், இஸ்ரேல் அளித்துவரும் பதிலடியானது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு மேலும் மேலும் ஆழமான துன்பங்களுக்கு மட்டுமே வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேலுக்கான இராணுவ உதவியாக 10 பில்லியன் டொலர்களை அனுமதிக்க வேண்டும் என ஜோ பைடன் காங்கிரஸிடம் கேட்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.
புதன்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்த ஜோ பைடன், இஸ்ரேலிடம் இருந்து கட்டுப்பாட்டை வலியுறுத்தியதாகவும், காஸா பகுதிக்கு மிகவும் அவசியமான மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதில் நெதன்யாகு உறுதியளித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.