சமன் ரத்நாயக்கவிற்கு விளக்கமறியல்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதிமன்றத்தில் சமன் ரத்நாயக்க இன்று (02) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (01) அழைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 8 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.
தடுப்பூசி இறக்குமதி
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (29) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தொடர்பில் போதுமான சாட்சியங்கள் காணப்படுமாயின் அவரையும் கைது செய்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு காணப்படுவதாக நீதவான் அறிவித்திருந்திருந்தார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்டோர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |