போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கணக்காளரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபரை இன்று(23) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி வரை 05 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான கணக்காளர் நேற்றையதினம் (22) மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது நடவடிக்கை
அண்மையில் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை காவல்துறையினர் குறித்த கணக்காளரை கைது செய்ய துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது கணக்களார் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலதிக விசாரணை
மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராக உள்ளமை காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 39 வயது மதிக்கதக்க சந்தேக நபரான கணக்காளர் கமறுத்தீன் முஹம்மது றியாஸிடம் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |