பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் - இராதாகிருஷ்ணன்
பெருந்தோட்டத்துறையிலும் மக்கள் மிகவும் கஷ்டத்துடன் வாழும் நிலையில், பெருந்தோட்டத்துறைக்கு முறையாக சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(6) எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மருந்து தட்டுப்பாடு
“நாட்டில் 112வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மருந்து பொருட்கள் உரிய காலத்தில் கிடைக்க தவறியதால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
தரமற்ற மருந்து, மருந்து ஒவ்வாமை போன்ற காரணங்களால் இதுவரை சுமார் 15 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் இன்று அரசாங்க வைத்தியசாலைக்கு செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். அங்கு வழங்கப்படுகின்ற மருந்து தொடர்பில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
விசேட வைத்திய நிபுணர்கள்
மேலும் 2024, 2025 காலப்பகுதியில் சுகாதார கட்டமைப்பில் காணப்படுகின்ற விசேட வைத்திய நிபுணர்களின் தொகை 3917ஆக இருக்கவேண்டும் .ஆனால் தற்போது இருப்பது 2184 விசேட வைத்திய நிபுணர்களே இருக்கின்றனர்.
அதேபோன்று விசேட வைத்திய நிபுணர்களில் பயிற்சிக்காக 7பேர் வெளிநாடு சென்றார்கள். அதில் 2பேர் மாத்திரமே நாடு திரும்பியுள்ளனர்.
2021 முதல் 2023வரையில் ஓய்வு பெற்ற நிலையில் வெளிநாடு சென்றுள்ள விசேட வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை 378.
ஓய்வு பெற்ற விசேட வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை 282. வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டிவருவதால் இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம்.
அத்துடன் கடந்த 3மாதங்களுக்கு முன்னர் நுவரெலியா வைத்தியசாலைக்கு கண் சிகிச்சைக்காக சென்ற 17 பேரின் கண் பார்வை இப்போதும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கிறது.
இவர்களுக்கு நட்டஈடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை அது கிடைக்கவி்ல்லை. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலையில் 8வயது குழந்தைக்கு மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்டிருக்கிறது.
அங்குள்ள தாதியர்கள் முறையாக செயற்படாதமையும் வைத்தியர்கள் முறையாக சிகிச்சை வழங்காதமையுமே இதற்கு காரணமாகும்.
இவ்வாறான நிலைக்கு நாட்டின் சுகாதாரத்துறை தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பெருந்தோட்ட வைத்தியசாலைகள்
பெருந்தோட்டத்தில் 500வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 44.
கடந்த வருடம் அமைச்சரவையின் அனுமதி கிடைத்தும் இன்னும் அரசாங்கம் பொறுப்பேற்காமல் இருக்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 59.
தோட்டங்களில் இன்னும் தோட்ட மருத்துவ உதவியாளர்களிடமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறது.
அதனால் ஏனைய பிரதேசங்களைப்போன்று மலையகத்திலும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து, சிறந்த வைத்தியர்கள், தாதியர்கள் நியமிக்கப்படவேண்டும்” என்றார்.
