யாழ். வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி ராஜீவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, பிரஜாசக்தி / சமூகசக்தி குழு விவகாரம் மற்றும் கடற்கரை வான் அகழ்வு நடவடிக்கையின் போது அகழப்பட்ட மணலை அகற்றும் விவ்காரம் தொடர்பில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.
கடந்த ஆட்சிகளில் இடம்பெற்றதைப் போன்று சமூகசக்தி குழு உறுப்பினர்கள் தெரிவிலும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்கட்டியதுடன் பதவி வழி தலைவர்களாக செயற்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
நகரபிதா பக்கச்சார்பாக செயற்பாடு
இதே போன்று கடற்கரை வான் அகழ்வு நடவடிக்கையின் போது அகழப்பட்ட மணலை அகற்றும் விவ்காரம் தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
குறித்த விடயத்தில் பருத்தித்துறை நகரபிதா பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.
கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரது அனுமதி மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச அமைப்பு சார்ந்து ஏற்படுத்தப்பட்ட தலையீடு ஆகியனவே குறித்த பணி தாமதத்திற்கு காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களது கருத்துகள் மூலமே தெளிவுபடுத்திய நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் இதன் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி தரப்பினரின் தலையீடு இருப்பதாகவும் பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தார். இவ்விவகாரம் தொடர்பில் இரு தரப்பிலும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.
இறுதியில் உரிய திணைக்கள தரப்பினரும் பருத்தித்துறை நகரசபையும் இணைந்து குறித்த விடயத்திற்கு தீர்வுகாணும் வகையில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தீர்மானங்களின் முன்னேற்ற அறிக்கை
டித்வா புயல் பாதிப்பு, கடற்றொழில் விவகாரம், பருத்தித்துறை பொன்னாலை வீதி அபிவிருத்தி நடவடிக்கை உள்ளிட்ட வீதிகள், பாலங்கள் அமைப்பது தொடர்பிலும், வடபிராந்திய போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலையில் உள்ள சாரதி வெற்றிடம் தொடர்ந்தும் நிரப்பப்படாது உள்ளமை, போக்குவரத்து சேவை சீரின்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற அறிக்கையும் ஆராயப்பட்டிருந்தது.
இக் கூட்டத்தில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகரசபைகள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள், பொலிஸ் இராணுவ அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
3 நாட்கள் முன்