கொழும்புத் துறைமுக உட்கட்டமைப்பிற்கு அரை பில்லியன் டொலர்கள்: உறுதியளிக்கும் டி.எப்.சி
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அரை பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பங்காளரின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்யும், உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யும் மற்றும் உள்ளூர் நிதி நிலைமைகளுக்கு மதிப்பளிக்கும் உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியளிப்பை மேற்கொள்வதில் DFC கொண்டுள்ள உறுதிப்பாட்டை இப்புதிய முனையம் பிரதிபலிக்கிறது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு (இந்தியாவுடன் உட்பட) ஆகியவற்றை ஏற்படுத்துவதில் அமெரிக்கா கொண்டுள்ள நீடித்த அர்ப்பணிப்பை இம்முதலீடு மேலும் நிரூபிக்கிறது.
அபிவிருத்தி
கொழும்புத் துறைமுகத்திற்குள் அமைந்துள்ள ஆழ்கடல் மேற்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்கு உதவி செய்வதற்காக Colombo West International Terminal Private Limited நிறுவனத்திற்கு வழங்கப்படும் 553 மில்லியன் டொலர் நிதியளிப்பினை ஆரம்பித்து வைப்பதற்காக DFCஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஸ்கொட் நாதன் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
புதிய முனையத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வௌிநாட்டமைச்சர் அலி சப்ரி, அதிபர் பணிக்குழுவின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் பிரதம நிறைவேற்று அதிகாரி நாதனுடன் இணைந்து கொண்டனர்.