டயானா கமகேவின் பதவி தொடர்பான தீர்ப்பு: நீதிமன்றத்தை விமர்சித்த ஓஷல ஹேரத்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக சமூக ஊடக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் இற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவை வினிவித பெரமுனவின் செயலாளர் நாகாநந்த கொடித்துவக்கு நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓஷல ஹேரத் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரம்
யூடியூப் சேனலுக்கு கலந்துரையாடல் ஒன்றை வழங்கிய ஓஷல ஹேரத், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் சீர்க்குலைக்கும் வகையிலும் அவர் செயற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதிவாதி ஓஷல ஹேரத் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும், அரசியலமைப்பின் 105 (3) பிரிவின் கீழ் அவரை தண்டிக்காததற்கான காரணங்களைக் கேட்டு தகுந்த தண்டனை வழங்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.