டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள்! பிரித்தானியாவின் தீர்மானம்
இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரித்தானிய - அமெரிக்க இராணுவத் தீவான டியாகோ கார்சியா(Diego Garcia) முகாமில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களுக்கு பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய 16 சிறுவர்கள் உட்பட 64 இலங்கை தமிழர்கள் கொண்ட குழு, ஏனைய நாடுகளுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தொலைதூர தீவில் சிக்கித் தவித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானம்
இவர்கள் அங்கு, பல்வேறு துயரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், பல வருட சட்ட மற்றும் மனிதாபிமான அழுத்தங்களுக்குப் பிறகு பிரித்தானிய அரசாங்கத்தின் மேற்படி சலுகை அவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இதன் மூலம், குற்றவியல் தண்டனைகள், நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாத அனைத்து குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் துணையில்லாத ஆண்களின் குடும்பங்கள் நேரடியாக பிரித்தானியாவுக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டும்.
குற்றவியல் தண்டனை
எவ்வாறெனினும், குற்றவியல் தண்டனை பெற்றதாகக் கூறப்படும் மூன்று தமிழர்கள் பிரித்தானியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சலுகைக்கான பணிகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்குள் இது தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் நீதிக்கான நீண்ட மோதலிற்கு கிடைத்த வரவேற்க தக்க நடவடிக்கை இதுவென தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |