திலீபனின் மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்கள்
திலீபனின் உண்ணா விரதம் தொடர்பான அத்தியாயங்களைக் கடந்து, ஈழத் தமிழருக்கு எதிரான இந்தியாவின் மற்றய துரோக நடவடிக்கைகள் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, திலீபனின் உண்ணாவிரத நிகழ்வுகள் தொடர்பான அத்தியாயங்களில் தவறவிடப்பட்ட சில விடயங்களை பார்த்துவிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
திலீபனின் உண்ணா விரதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இந்தியா மிகவும் கேவலமான, பிற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.
திலீபனின் போராட்டத்தையும், அவனது தியாகத்தையும் கொச்சைப்படுத்தும்படியான பலவித நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருந்தது.
இந்திய அரசின் உத்தியோகபூர்வ வானொலி சேவையான அகில இந்திய வானொலியில் திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தும் படியான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
தலைவரைப் பற்றிய தவறான கருத்துக்கள்
திலீபனைப் பற்றியும், புலிகளின் தலைவரைப் பற்றியும் தவறான கருத்துக்களை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில், அது முழுமூச்சுடன் இறங்கியிருந்தது.
மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தவர்தான். ஆனால் அவர் தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி கூறவில்லை.
மகாத்மாவே நேரடியாக உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்திருந்தார். ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார்.
என்று அகில இந்திய வானொலி பிரச்சாரம் செய்தது. அதேபோன்று, திலீபன் தொடர்பாக, மற்றொரு வதந்தியும் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது.
திலீபன் ஏற்கனவே நடைபெற்றிருந்த சண்டை ஒன்றில் காயம் அடைந்திருந்ததால், அவனது ஈரலில் ஒரு பகுதியும், மற்றய சில உள்ளுறுப்புக்களும் ஏற்கனவே வைத்திய சிகிச்சையின் போது அகற்றியெடுக்கப்பட்டுவிட்டன.
திலீபன் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதனால்தான் திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை துணிந்து மேற்கொண்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டன.
(இந்தியப்படையுடன் ஈழத்திற்கு வந்திருந்த தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் இப்படியான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் அரும்பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.)
அதேபோன்று, திலீபன் மரணம் அடைந்த பின்பும், இந்தியாவின் சகபாடிகளால் மேலும் பல வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன.
இறுதி நேரத்தில் திலீபன் தன்னைக் காப்பாற்றும்படி சக போராளிகளிடம் கெஞ்சியதாகவும், ஆனால், புலிகள் திலீபனை வலுக்கட்டாயமாக உண்ணாவிரதம் இருந்து சாகடித்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.
திலீபன் புலிகளால் விஷ ஊசி ஏற்றிக் கொல்லப்பட்டதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியாவின் அடிவருடிகளால் வதந்திகள் பரப்பப்பட்டன.
திலீபனின் போராட்டமானது, இந்தியா பற்றி தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மாயையை உடைந்திருந்தது. இதனைப் பொறுக்க முடியாத இந்தியாவின் உளவுப் பிரிவினரே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதில் பிரதான பங்கு வகித்திருந்தார்கள்.
அவர்கள் தமது திட்டத்திற்கு இந்தியப் படைகளின் தயவில் தங்கியிருந்த தமிழ் அமைப்பின் உறுப்பினர்களையும், அவர்களின் குடும்பத்தினர்களையும் பயன்படுத்தினார்கள். ஆனால், இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்களை இந்தியாவிற்கு எதிராக மேலும் கோபம் கொள்ள வைத்ததுடன், திலீபன் மீது தாம் கொண்டிருந்த அன்பை மென்மேலும் அதிகரிக்கவும் செய்தது.
சண்டைகளின் போது விழுப்புண் அடைவது புலிகளுக்கு புதிதல்ல. இதை புலிகளுடன் தோளோடு தோள் நின்ற தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
சுமார் ஆறு மாத காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சண்டையின் போது திலீபன் வயிற்றில் காயமடைந்திருந்தது உண்மைதான்.
ஆனால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அளவிற்கு திலீபனுக்கு உடல்நிலை ஒன்றும் மோசமாக இருக்கவில்லை என்பதை, திலீபனின் வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
அத்தோடு, மரணத்திற்கு முன்பதாக திலீபன் ஆற்றியிருந்த உரை, தனது குறிக்கோளில் திலீபன் கொண்டிருந்த உறுதியை வெளிப்படுத்துவதாக இருந்தது. “நான் என் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன்.
நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும். மக்கள் அனைவரும் எழுச்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும்.
இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது.
திலீபனின் ஞபகார்த்தமாக
திலீபனின் விருப்பப்படி அவரது உடல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் கையளிக்கப்பட்டது.
திலீபனின் ஞாபகார்த்தமாக புலிகளின் மருத்துவப் பிரிவினர், 2003 மார்ச் மாதம் 27ம் திகதி வன்னி, நைனாமடுவில் ஒரு வைத்தியசாலையை திறந்துள்ளார்கள்.
தியாகி திலீபனின் நினைவு நாள் ஆண்டுதோறும் தமிழ் கூறும் நல்லுலகம் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. “எமது மண்ணின் விடுதலைக்கு யார் போராடுகிறார்களோ அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொன்ன மண்ணின் மைந்தன் திலீபனின் மறைவு நாள் நினைவாகவே, கிளிநொச்சி சிங்கள இராணுவ முகாம் 1998இல் புலிகளால் தகர்க்கப்பட்டது.
திலீபனின் மரணம் ஏற்படுத்திய பிளவு
புலிகளுடனான இந்தியப் படையினரின் யுத்தத்திற்கு கட்டளையிடும் உயரதிகாரியாக கடமையாற்றியவர் லெப். ஜெயரல் திபீந்தர் சிங். ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட சாதனைகளுக்காக(??) அவருக்கு இந்திய அதிபரால் சிரோமணி விருது, விஷித் சேவா விருதுஎன்று பல விருதுகள் வழங்கப்பட்டன.
திபீந்தர் சிங் பின்நாட்களில் தனது ஈழ அணுபவம் பற்றி IPKF in Sri Lanka என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதில் திலீபனின் உண்ணாவிரதம் பற்றியும், எழுதியிருந்தார்.
திலீபனின் மரணம் பற்றி அவர் இவ்வாறு முடித்திருந்தார்.யாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் திலீபன். அவரது மரணம் இந்தியாவிற்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையில் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தும்படியாக அமைந்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |