ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்தும் உறுதிப்பாட்டில் ஸ்ரீலங்கா!
ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்துவதிலான உறுதிப்பாட்டை ஸ்ரீலங்கா கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஜெனிவா தொடர்பான புத்தக வெளியீட்டில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா தூதுவர்கள் மன்றத்தினால் தொகுக்கப்பட்ட 'ஜெனீவா நெருக்கடி - முன்னோக்கிச் செல்லும் வழி' என்ற புத்தகம் வெளிவிவகார அமைச்சில் வைத்து நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனஇ வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் புத்தகத்தில் ஜெனீவா நெருக்கடி தொடர்பான இருபத்தி எட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய வெளிவிவகாரஅமைச்சர் வெளியுறவுச் செயலாளர் உட்பட பல முக்கிய நபர்களால் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மேலும் ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் நிபுணர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்வியியலாளர்கள் பலர் இந்தப் புத்தகத்திற்காகப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் தூதுவருமான சரத் விஜேசிங்க, எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்திற்கு பிரதிபலிப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக அன்றி ஜெனீவா நெருக்கடியின் முழுமையான எதிர்காலத்தையும் மையமாகக் கொண்ட ஒரு தீர்வாக இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்தினார். தற்போது நிலவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சில நாடுகளை இலக்கு வைப்பதானது உலகின் முன்னுரிமையாக தற்போது இருக்கக்கூடாது என அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றி வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பான இலங்கையின் முன்னோக்கிய வழியை வெளிப்படுத்தினார்.
ஸ்ரீலங்காவின் நிலைப்பாட்டை ஆதரித்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரசு சாரா நபர்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் தன்னார்வப் பங்களிப்பைப் பாராட்டினார்.