சுற்றுலா வந்தவேளை இடம்பெற்ற அனர்த்தம் - கரையொதுங்கியது இளைஞனின் சடலம்
திருகோணமலை நிலாவெளி கடலில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞர் தலாவ-தம்பகஹவெல,பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என். நளின் பிரியன்த (21வயது) எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நேற்று 16ம் திகதி திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு வருகை தந்திருந்த நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் கடற்படையினரும், உப்புவெளி காவல்துறை உயிர்காக்கும் பிரிவினரும் இணைந்து தேடுதலை மேற்கொண்டிருந்த போதிலும் இன்று காலை சடலம் கரையொதுங்கியுள்ளதாக காவல்தறையினர் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
