கொரோனா தொற்றாளர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் பாரிய முரண்பாடு -வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஆங்கில ஊடகம்
நாட்டில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சின் இரு பிரிவுகள் வெளியிடும் புள்ளிவிபரங்கள் மத்தியில் பாரிய முரண்பாடு காணப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிவரை நோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 4137 எனவும் ( பிசிஆர் சோதனை முடிவுகள்) துரித அன்டிஜென் சோதனைகள் மூலம் 1064 பேர் அடையாளம் காணப்பட்டனர் எனவும் சுகாதார அமைச்சின் கொவிட் 19 செயற்பாட்டு பிரிவு தெரிவித்திருந்தது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெள்ளிக்கிழமை தனது புள்ளிவிபரங்களை வெளியிடாத போதிலும் தொற்றுநோய் பிரிவின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து தனது புள்ளிவிபரங்களை வெளியிட்ட அரசாங்க தகவல் திணைக்களம் 3152 நோயாளிகளே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிவித்தது.
ஓகஸ்ட் 11 ம் திகதி முதல் சுகாதார அமைச்சு வெளியிடும் புள்ளிவிபரங்களில் இவ்வாறான வேறுபாடுகள் காணப்படுகின்றன என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 செயல்பாட்டு பிரிவு அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ள அதேவேளை தொற்றுநோயியல் பிரிவு அதனைவிட குறைவான எண்ணிக்கையையே வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிடும் இந்த தவறான குறைவான எண்ணிக்கையையே சுகாதார ஊக்குவிப்பு பணியகம்,அரசாங்க தகவல் திணைக்களம்,ஜனாதிபதி செயலகத்தின் கொவிட் பிரிவு ஆகியன வெளியிடுகின்றன.