சிறிலங்காவின் பொறுப்புக்கூறலுக்கான போராட்டம் பற்றிய கலந்துரையாடல் இன்று
சிறிலங்காவின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான போராட்டம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளதுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் உள்ளிட்ட மூன்று அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
சிறிலங்காவிற்கான புதிய பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியுள்ள நிலையில் சிறிலங்காவின் பொறுப்புக்கூறலுக்கான போராட்டம் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், தென்னாபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியன இணைந்து இதனை நடத்துகின்றன.
ஐ.நாவின் சிறிலங்காவிற்கான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினை பலப்படுத்துவது பற்றிக் கலந்துரையாடப்படவுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினது முயற்சிகள் மற்றும் சிறிலங்காவின் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் மற்றும் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை அதிகரிப்பதற்கான அதனுடைய ஆற்றல் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
குடிசார் சமூகம் மற்றும் அங்கத்துவ நாடுகள் என்பவற்றுக்கிடையான சாத்தியமான ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய சட்ட வரம்பு வழக்குகள், தடைகள் மற்றும் உண்மையைக் கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான ஈடுபாட்டிற்கு உதவியளித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் முன்னேற்றமான நடவடிக்கைகளுக்கு ஆதரவாகப் பேசுவதன் மூலம் மற்றும் பங்குகொண்டு உதவுவதன் மூலம் வெளிநாட்டிலும் சிறிலங்காவிலும் சிவில் சமூகத்தினைப் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
