இன, மத சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முயற்சிகள்- முன்னாள் சபாநாயகர்
இன, மதரீதியில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து நாட்டின் ஸ்திரநிலையை சீர்குலைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய மத வணக்கஸ்தலமொன்றின்மீது பெற்றோல்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த பௌத்த தேரர்கள், முஸ்லிம் மௌலவிகள், இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார் இணைந்து விசேட கூட்டமொன்றை நடத்தியதுடன் அதில் நாட்டைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இந்தக் கூட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்திஜீவிகள் பலரும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தின் நிறைவில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து கூட்டறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.
நாட்டில் வாழும் பல்வேறு இன, மத சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைகயையும் முழுமையாகத் தோற்கடிப்பதற்கு அவசியமான தூரநோக்கு சிந்தனையையும் தைரியத்தையும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் விதைக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் நன்கறிந்திருப்பதாகவும் அதனை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஏனைய தனிப்பட்ட நலன்களை அடிப்படையாகக்கொண்டு, இன மற்றும் மதரீதியான பிளவுகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்படும் குழுக்களைத் தோற்கடிப்பதற்கு நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை அமுல்படுத்துவதற்கு எமது நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமானவையாகும்.
காவல்துறையினர், அரசசேவையாளர்கள் மற்றும் நீதித்துறையின்மீது அழுத்தம் பிரயோகிக்கப்படாவிட்டால் சட்டம் அனைவருக்கும் சமத்துவமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
குறிப்பாக எதிர்க்கட்சியினால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவையும்மீறி இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தமையானது ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் பிரகடனத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என தெரிவித்துள்ளார்.
அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் நாட்டுமக்கள் மத்தியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகத்தினால் சீனி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்டநேரம் வரிசைகளில் காத்திருக்கின்றார்கள். அதனால் மக்களுடைய அன்றாட வாழ்க்கை முழுமையாகப் பாதிப்படைந்திருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலமும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் மட்டுமீறிய அதிகாரங்களும் அரசாங்கத்தின் வசமுள்ள போதிலும், அதனைப் பயன்படுத்தி இந்நெருக்கடிக்குரிய தீர்வை அரசாங்கம் வழங்காததன் காரணமாக நாட்டுமக்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.