ஈ.பி.டி.பி மீது விசமத்தனமான குற்றச்சாட்டு - வெளியானது கண்டன அறிக்கை
தமிழ் மக்களுக்கு நாம் காட்டிய அரசியல் கொள்கைகளே இன்று நிதர்சனமாகியுள்ள நிலையில் எம் மீது தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வரும் அவதூறுகளையும், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும் நாம் கண்டிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் இலண்டனில் போர்க்குற்றங்களோடு தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கைதுகள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்கள், குறித்த சம்பவத்தை ஈ.பி.டி.பியின் மக்கள் நலச் செயற்பாடுகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டு மீண்டும் எம்மீது சேறுபூசும் கைங்கரியத்தை அரங்கேற்றி இருக்கின்றன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் பணியானது, இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு எமது மக்கள் பெறவேண்டியதை நடைமுறைச் சாத்தியமான பொறிமுறையூடாகவும், தேசிய நல்லிணக்கத்தின் பாதையிலும் சாதித்துப் பெற்றுக் கொள்வதேயாகும் என்பதை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வலியுறுத்தி வருவது மட்டுமல்லாது நிரூபித்தும் காட்டி வருகின்றோம்.
அதற்கான எமது ஈடுபாட்டையும், அர்ப்பணிப்பையும் பொறுத்துக் கொள்ளாத பயங்கரவாதிகளும், அவர்களின் படுகொலைகளை நியாயப்படுத்தியும், அவர்களுக்கு துதிபாடியும் பிழைப்பு நடத்தியும் வந்தவர்களால் எமது கட்சியின் பல உறுப்பினர்கள் பலிகொள்ளப்பட்டனர். பலர் புலத்தில் வாழமுடியாத கொலை அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்து போனதும் கடந்தகால கசப்பான வரலாறாகும்.
இந்தநிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் ஒரு போதும் கொலைகளை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. கொலைகளுக்கூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களுமில்லை என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
இந்தநிலையில் எம்மீது பல அவதூறுகளை சுமத்தியும் வந்துள்ள தரப்பினர், தற்போதும் எங்கெங்கோ நடந்தேறும் சம்பவங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புபடுத்தி விசமத்தனமான உள்நோக்கத்துடன் செய்தி பரப்புவதானது அவர்களின் அரசியல் ரீதியான உள்நோக்கம் கொண்ட செயலாகும். அத்தகைய செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம்.
