எரிபொருள் விநியோகஸ்தர்கள் சந்திக்கும் நெருக்கடி! அரசுக்கு அவசர கோரிக்கை
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்தால் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அச்சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
கூட்டுத்தாபனத்தின் இழப்புகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், குறித்த இழப்புகள் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால் இந்த வரியை மேலும் தொடர்வது அவசியமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டுவிட்டதால் விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்கி நுகர்வோருக்கு அந்த நிவாரணத்தை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள QR முறையும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% சேர்க்கப்பட்ட மதிப்பு வரி (VAT) மற்றும் விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகை 3 % இலிருந்து 1.6 % ஆகக் குறைக்கப்பட்டமையால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள சினோபெக் (Sinopec), LIOC மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) போன்ற நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |