வைத்தியர் சிவரூபன் பிணையில் விடுதலை
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த 18.08.2019 அன்று கைது செய்யப்பட்ட பளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபன் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பளை கரந்தாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடி மருந்துடன் தொடர்பு எனவும் தாளையடி கடற் பரப்பில் பாறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து பொதியுடன் தொடர்பு மற்றும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து, குறித்த வைத்தியர் 18.08.2019 அன்று இரவு ஆனையிறவு பகுதியில் வைத்து இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
கைதை தொடர்ந்து அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு இருந்தார். விசாரணைகளை மேற்கொண்டிருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவருடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆறு பேரை கைது செய்தனர்.
அவர்களில் ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் 2022.01.09 அன்று எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் விடுவித்திருந்தது.
வைத்தியருடன் சேர்ந்து மற்ற நபரின் வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதவான் AMA சகாப்தீன் முன்னிலையில் நேற்று 09.02.2023 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த இருவரையும் 50000 ரூபா காசு பிணையில் ஒவ்வொருக்கும் இருபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப் பிணையிலும் வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஒப்பம் இடுமாறும் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வைத்தியர் சார்பாக அதிபர் சட்டத்தரணியும் நீதி அமைச்சினுடைய சட்ட ஆலோசகருமான URD SILVA தலைமையிலான 09 சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நான்கு வருடமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்க பட்டிருக்கிறேன்.
மகசீன் சிறையில் என்னைப்போல் 16 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என வைத்தியர் சின்னையா சிவரூபன் தெரிவித்துள்ளார்.
