இரட்டை சிசுக்களை காப்பாற்ற விரைந்து செயற்பட்ட மருத்துவர் - வெளியான தகவல்
பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு தேவையான சுவாச உபகரணங்களை தானே முன்னின்று தனியாளாக எடுத்துச் சென்று அந்த சிசுக்களை காப்பாற்றிய மனிதநேயமிக்க மருத்துவர் தொடர்பான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
பசறை மாவட்ட வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு துரிதமாக செயற்பட்டவர் பதுளை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் கிஹான் ஹெட்டியாராட்சி என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பசறை பகுதியைச் சேர்ந்த 28 வயதான கர்ப்பிணித் தாயொருவர், குழந்தையை ஈன்றெடுப்பதற்காக பசறை மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். 28 வாரங்களான இரட்டை சிசுக்களை அவர் பெற்றெடுத்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சிசுக்கள் பிறந்ததை அடுத்து, ஏற்பட்ட அவசர சிகிச்சைகளுக்கு தேவையான வசதிகள், பசறை வைத்தியசாலையில் இல்லாமையினால், அது குறித்து மாவட்ட வைத்திய அதிகாரி, பதுளை பொது வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளார். சுகயீனமுற்ற சிசுக்களை அழைத்து வருவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அம்புலன்ஸ் ஆகியவற்றை தயார்படுத்தும் வரை பொறுத்துக்கொள்ள முடியாத குறித்த வைத்தியர், தனது சொந்த காரில் பசறை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.
சிசுக்களுக்கு சுவாசத்தை வழங்கக்கூடிய உபகரணங்களை தனது காரில் எடுத்துக்கொண்டு, குறித்த வைத்தியர் இவ்வாறு பசறை நோக்கி விரைந்துள்ளார். பதுளை முதல் பசறை வரையான 28 கிலோமீற்றர் தூரத்தை, சுமார் 20 நிமிடங்கள் என்ற குறுகிய நேரத்தில் வைத்தியர் அண்மித்துள்ளார்.
இதன்படி, உரிய நேரத்தில் சிசுக்களுக்கு சுவாசத்தை வழங்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, பதுளை வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி, மேலும் சில வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுடன் பசறை வைத்தியசாலையை அண்மித்துள்ளது.
இவ்வாறு பசறை வைத்தியசாலையை அண்மித்த பதுளை பொது வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி, பிறந்த சிசுகள் மற்றும் தாயை ஏற்றிக் கொண்டு, பதுளை பொது வைத்தியசாலையை நோக்கி மீண்டும் விரைந்தது.
பிறந்த இரட்டை சிசுக்கள், தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், தேகாரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
