அரச நிகழ்வுகளை தேர்தல் பரப்புரை மேடையாக்காதீர்! ரணில் முன்னிலையில் சுமந்திரன் இடித்துரைப்பு
''அரச வைத்தியசாலை கட்டடம் திறத்தல், காணி உறுதி வழங்கல் போன்றவை அரசு நிகழ்வுகள். அந்த நிகழ்வு மேடைகளை தேர்தல் பிரசாரத்துக்கான தளமாக்கிக் கொள்ளாதீர்கள்'' என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் (Ranil Wickremesinghe) வைத்துக் கொண்டு இன்று (25) கிளிநொச்சி மாவட்டத்தில் பங்குபற்றிய இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு இடித்துரைத்துள்ளார்.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் ரணில் முன்னிலையில் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி. அங்கு கூறிய முக்கிய விடயங்களின் சாராம்சம் வருமாறு "இவை அரசு நிகழ்வுகள். இங்கு பலரினதும் உரைகள் இவற்றைத் தேர்தல் பிரசார மேடையாக்கும் போக்கில் தென்படுவது மன வருத்தத்துக்குரியது.
மத்திய அரசு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றும் ரணிலின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஏற்கனவே அது போதனா வைத்தியசாலை என்ற முறையில் மத்திய அரசுக்குக் கீழேயே உள்ளது. அதை மத்திய அரசு கையாள்வது வரவேற்கத்தக்கதே.
ஆனால், கல்வியும் சுகாதார வைத்தியத்துறையும் மாகாணத்துக்குப் பகிரப்பட்ட விடயங்கள். தேசிய பாடசாலை என்ற பெயரில் பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் மாற்றுவது, வைத்தியசாலைகளை நேரடியாக மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் எடுப்பது எல்லாம் தவறானவை. அவற்றைச் செய்யாதீர்கள்.
தவறான தீர்ப்பு
காணி உறுதிப் பத்திரம் மக்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்கின்றோம். ஆனால், 13ஆவது திருத்தத்தின் கீழ் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்குரியவை. அதனை உயர் நீதிமன்றமும் ஒரு தீர்ப்பில் அங்கீகரித்திருந்தது.
எனினும், அந்தத் தீர்ப்பைச் செல்லுபடியற்றதாக்கும் தவறான தீர்ப்பு ஒன்றை அதன் பின்னர் அதே நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தவறான தீர்ப்பைப் பயன்படுத்தி மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட காணி அதிகாரங்களை மத்திய அரசு கையாளக்கூடாது.
காணி உறுதிகள் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை கூட மாகாணக் கட்டமைப்புகள் மூலமே முன்னெடுக்கப்பட வேண்டும்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |