டொனால்ட் ட்ரம்பின் மற்றொரு முடிவையும் தாமதப்படுத்திய ஜோ பைடன்! வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
‘எச்1 பி' விசா வழங்குவதில் குலுக்கல் முறையே இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது.
குறிப்பாக இந்தியர்களும், சீனர்களுமே இந்த விசாவினை பெற்று அங்கு தொழில்புரிந்து வருகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் இவ்விசா மூலமாக அங்கு சென்று பணியாற்றுகிறார்கள்.
ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதற்கு 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது.
எனினும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனது பதவியின் கடைசி காலத்தில் கடந்த மாதம் 7ஆம் திகதி ‘எச்1 பி' விசா நடைமுறையில் குலுக்கல் முறையை மாற்றி, விண்ணப்பிப்போரின் தகுதிக்கேற்ப மதிப்பெண் அடிப்படையில், விசா வழங்குவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.
இந்த உத்தரவு வரும் மார்ச் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக இருந்தது.
இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ‘எச்1 பி' விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அதாவது எச்1 பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை குலுக்கல் முறையே தொடரும் என ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.