மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்: சவூதி மன்னருக்கு அவசர கடிதம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சஊதுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சிவராசா அனோஜன் செய்த தவறை தாங்கள் எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள தலைவர்கள், அவர் அறியாமையினாலோ அல்லது உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்திலோ சமூக வலைத்தளத்தில் தவறான கருத்தைப் பதிவிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பூமியில் உள்ளவர்கள் மீது கருணை
அனோஜன் தனது தவறை உடனடியாக உணர்ந்து அதற்காக உண்மையாக மன்னிப்புக் கோரியுள்ளமையையும், தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றமையையும் அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாம் மார்க்கம் கருணையையும் மன்னிப்பையும் உயர் பண்புகளாகப் போற்றுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், "பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுபவர்கள் மீது சொர்க்கத்தில் உள்ள (அல்லாஹ்) கருணை காட்டுவான்" என்ற நபிமொழியை நினைவூட்டியுள்ளனர்.
அனோஜனின் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பத்தினரின் நிலையைக் கருத்திற்கொண்டு, மனிதநேய அடிப்படையில் அவரது உயிரைக் காப்பாற்றுமாறு சவூதி மன்னரிடமும் அரசிடமும் அவர்கள் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |