சஜித் பிரேமதாசவை அரச தலைவர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டாம்: டயனா கமகே அறிவுறுத்தல்
அரச தலைவர் தேர்தலின் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரச தலைவர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டாம் என முக்கிய தரப்பினர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
"பல்வேறு தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை அவரிடம் தற்காலிகமாகவே ஒப்படைத்தேன். கட்சியை ஒப்படைத்து 3 மாத காலத்திற்குள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிர்வாகத்திற்கு பொருத்தமற்றவர் என்பதை விளங்கிக் கொண்டேன்.
நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்கும் தகைமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடையாது. கட்சியை கூட முறையாக நிர்வகிக்காதவர் எவ்வாறு நாட்டை நிர்வகிப்பார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினேன்.
அதனை தொடர்ந்து அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் மனசாட்சிக்கு அமைய நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆதரவு வழங்கியுள்ளேன்.
அரச தலைவரின் தலைமையிலான அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவேன். அரச தலைவரின் நிர்வாகம் தோல்வியடைவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அரச தலைவரின் தூரநோக்கு சிந்தனை நாட்டின் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்தும். எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே வெற்றிபெறுவார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது என மேலும் தெரிவித்துள்ளார்.