சிறிலங்கா விமானப்படையுடன் இணைகிறது இந்திய கண்காணிப்பு விமானம்..!
இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட முதல் டோர்னியர் விமானம் ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையுடன் இணைக்கப்படவுள்ளது.
அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் பங்கேற்றலுடன், 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் டோர்னியர் விமானம், இலங்கையின் விமானப்படையில் இணைக்கப்படவுள்ளது.
இந்திய விமானப்படையின் மேற்பார்வையுடன் நான்கு மாத காலத்திற்கு இந்தியாவில் பயிற்சி பெற்ற 15 விமானப்படை குழுவினரால் மட்டுமே இந்த விமானம் பராமரிக்கப்படும் என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கை
 
2018, ஜனவரி 09ஆம் திகதியன்று புது டெல்லியில் நடைபெற்ற இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உரையாடலின் போது, இலங்கை அரசாங்கம், இந்தியாவிடமிருந்து இரண்டு டோர்னியர் உளவு விமானங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நாடியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் தொடர்ச்சியாக, புதிய விமானங்களை தயாரிப்பதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படும் என்பதால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு டோர்னியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்திய கடற்படையிலிருந்து இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இந்தநிலையில் இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் மூலம் மற்றுமொரு புத்தம் புதிய டோர்னியர் 228 இலங்கை விமானப்படைக்கு விரைவில் உள்வாங்கப்படும் என இலங்கையின் விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை டோர்னியர் 228 விமானம்,என்பது குறுகிய நேரத்தில் மேழெழுந்து மற்றும் குறுகிய நேரத்தில் தரையிறங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இரட்டை எஞ்சினுடன் கூடிய இலகுரக போக்குவரத்து விமானம் ஆகும், இது 1981 ஆம் ஆண்டு முதன் முதலாக இது தயாரிக்கப்பட்டது.  
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        