டக்ளஸிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ். நூலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது எதிர்பார்ப்பினையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,"குறித்த வரவு - செலவுத் திட்டத்தின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள தீர்மானித்துள்ள விடயங்கள் தொடர்பில் தங்களது அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
யாழ்.பொது நூலகம்
குறிப்பாக யாழ். பொது நூலகத்தை மிக அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நீங்களே உங்களது உரையில் கூறியிருக்கிறீர்கள்.
அதற்கென இம்முறை 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளீர்கள்.
அதனைப் பயன்படுத்தி நூலகத்தை முழுமையாக டிஜிடல் மயப்படுத்துவதன் மூலமாக, இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் இலகுவாக இந்த நூலகத்தை பயன்படுத்தும் நிலையை உருவாக்க முடியும் என்பதுடன், ஆவணங்களைப் பாதுகாத்து, பராமரிப்பதற்கும், இடவசதியினைப் பேணுவதற்கும் வசதியாக இருக்கும்.
இராணுவத்தினர் வசமுள்ள காணி
அதேபோன்று, கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள நூலகத்திற்கு சொந்தமான காணி இராணுவத்தின் வசம் இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் குறித்த காணியின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டு, கரைச்சி பிரதேச சபையினால் கட்டிடம் கட்டப்பட்ட போதிலும், குறித்த கட்டிடம் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
எனவே, குறித்த கட்டிடத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நூலகத்தினை மக்கள் பாவனைக்கு கையளிப்பதுடன், நூலகத்திற்கான எஞ்சிய காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்"என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
