ஐ.நா சபையில் பாகிஸ்தானை புறக்கணித்த இந்தியா!
முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட வரைவு தீா்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரைவுத் தீா்மானத்துக்கு ஆதரவாக 115 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில், எந்தவொரு நாடும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை, இந்நிலையில் இந்தியா, பிரித்தானியா, பிரேசில், ஜொ்மனி, இத்தாலி, உக்ரைன் உள்பட 44 நாடுகள் தீா்மானம் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.
இதில், இந்த வரைவுத் தீர்மானம் எதிர்காலத்தில் பிற மதத்தவர்களிடையேயும் வேற்றுமையை ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தை இந்தியா முன்மொழிந்து வரைவு தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருந்தது.
முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வு
ஐ.நா. பொதுச் சபையில் ‘முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிரான நடவடிக்கைகள்’ என்ற பெயரில், பாகிஸ்தான் சாா்பில் கடந்த வெள்ளிக்கிழமை (15) வரைவு தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு, விரோதம், வெறுப்புணா்வு மற்றும் வன்முறையை தூண்டுதல், அவா்களுக்கு எதிரான மதச் சகிப்புத்தன்மையற்ற பிற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அந்தத் தீா்மானம் கண்டனம் தெரிவிப்பதாக அமைந்திருந்தது.
முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வை எதிா்த்துப் போரிட சிறப்புத் தூதரை நியமிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் அந்தத் தீா்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தியா கண்டனம்
இந்தத் தீா்மானம் குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதுவர் ருசிரா கம்போஜ் குறிப்பிடுகையில் "கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், யூதா்கள் மீதான வெறுப்புணா்வால் தூண்டப்பட்டு, அவா்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது.
ஆனால் கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதம் ஆகியவை அடங்கிய ஆபிரகாமிய மதங்களைத் தாண்டி, பிற மதங்கள் மீதும் வெறுப்புணா்வு நிலவுகிறது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம்.
பல ஆண்டுகளாக ஆபிரகாமிய மதங்கள் அல்லாத பிற மதங்களைச் சோ்ந்தவா்களும் மத ரீதியான வெறுப்புணா்வால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.
இந்நிலையில், ஹிந்துக்களின் கோயில்கள், சீக்கியா்களின் குருத்வாராக்கள், பெளத்த மடாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
மதரீதியாக பிளவு
பல நாடுகளில் ஆபிரகாமிய மதங்கள் அல்லாத பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்புணா்வு மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை மதரீதியான வெறுப்புணா்வின் தற்கால வடிவங்களுக்கு ஆதாரமாக உள்ளன.
எனவே இது ஒரே ஒரு மதத்துக்கு எதிராக மட்டும் வெறுப்புணா்வு இருப்பது போல கூறாமல், பிற மதங்களுக்கு எதிராகவும் வெறுப்புணா்வு இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தற்போதைய தீா்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், பிற்காலத்தில் குறிப்பிட்ட மதங்களுக்கு எதிரான வெறுப்புணா்வை மையமாகக் கொண்ட எண்ணற்ற தீா்மானங்களை ஐ.நா.வில் கொண்டுவருவதற்கு வழிவகுக்கக் கூடாது. அது ஐ.நா.வை மதரீதியாக பிளவுபடுத்திவிடக் கூடும். ஐ.நா.வின் நிலைப்பாடு மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பது முக்கியம்" என்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |