காவல்துறையினரின் அதிரடி சோதனை - போதைப்பொருளுடன் சிக்கிய யாத்திரிகர்கள்
ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகளை சோதனை செய்த போது பல்வேறு போதைப்பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையில் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கோட்ட குற்றத்தடுப்பு பிரிவக் பொறுப்பதிகாரி பிரேமலால் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் பெற்றோர்கள் இன்றி நண்பர்களுடனும் அயலவர்களுடனும் இணைந்து சிவனொளிபாதமலை தரிசிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்றும் இவர்கள் சுமார் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலை

நேற்று (18) கினிகத்தேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் யட்டிபேரிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கொழும்பு, ஹோமாகம, பொலன்னறுவை உள்ளிட்ட நாட்டின் பல பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா 50 கிராம், மதன மோதக 120 கிராம், 12 போதை மாத்திரை, 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இவர்கள் அனைவரையும் இன்று (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.