இலங்கையின் போதைப்பொருள் விநியோக மையமாக மாறிய தமிழர் பகுதி
இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் உயிர் கொல்லி போதைப்பொருட்களை கடத்துகின்ற - விநியோகிக்கின்ற மையமாக வடக்கு மாகாணம் மாறியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சினூடாக முன்னெடுக்கவுள்ள நடமாடும் சேவையில் கலந்துகொள்ள வந்துள்ள அமைச்சர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.
போதைப்பொருள் விற்பனை
மேலும் அவர் தெரிவிக்கையில், “உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனை வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது.
எனது யாழ். பயணத்தின் போது இது தொடர்பில் ஆராயவுள்ளேன். சகல தரப்பினருடனும் இது குறித்து பேசுவேன்.
வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதால் மிகப்பெரும் சமுதாய பிரச்சினை உருவாகியுள்ளது.
அது மட்டும் அல்லாமல் பெருமளவான உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனை முகவர்கள் வடக்கு மாகாணத்தின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்” - என்றார்.
கலந்துரையாடல்
இதேவேளை, வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்றும் இன்று மாலை இடம்பெற்றது.
இதில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், காவல்துறை அதிகாரிகள், இராணுவத்தினர், கடற்படையினர், சுகாதார கல்வித் துறை அதிகாரிகள், வைத்தியர்கள், துறைசார் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உத்தரவாதம் வழங்கியுள்ளார்.