மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை - கடை உரிமையாளர் கைது
பாணந்துறை எலுவில சந்தி பகுதியிலுள்ள கடையொன்றில் புகையிலை கலந்த மாவா எனப்படும் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒருவர் சுமார் பத்து இலட்சம் பெறுமதியான மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் கடையில் மறைத்து வைத்திருந்த சுமார் பத்து கிலோ மாவா போதைப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சுற்றிவளைக்கப்பட்ட விற்பனை நிலையம்
பாணந்துறை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் உதய குமாரவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பாணந்துறை வல்லான ஊழல் ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் பிரதம பரிசோதகர் இந்திக வீரசிங்கவின் பணிப்புரைக்கமைய குறித்த கடையை சுற்றிவளைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மெழுகுப் பைகளில் அடைக்கப்பட்ட 25 கிராம் மாவா போதைப்பொருள் ரூ.1000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புக்கு வரும் பாடசாலை மாணவர்கள்
இங்கு மேலதிக வகுப்புக்கு வரும் பாடசாலை மாணவர்கள், மாணவர்கள் இதற்கு அடிமையாகி உள்ளதாக கவல்தறையினர் கூறுகின்றனர்.
சந்தேகநபர் நாற்பத்தெட்டு வயதுடைய திருமணமாகி பிள்ளைகளை உடையவர் எனவும், சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.