வெளிநாடுகளில் கைதான போதைப்பொருள் குற்றவாளிகள் : அரச தரப்பின் அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்படும் போது, அவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால், அவர்களை அழைத்து வருவதில் சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமின்றி மத்திய கிழக்கு நாடுகளிலும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருக்கின்றனர்.
அந்த நாட்டின் குடியுரிமை
டுபாய், ரஷ்யாவில் தலா ஒருவரும் இந்தியாவில் 10 முதல் 12 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிவப்பு அறிவித்தலை வழங்கியவுடன் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியும்.

எனினும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டிருந்தால் அவர்களை அழைத்து வருவதில் பெரும் சிரமங்கள் இருக்கின்றன.
மறுபுறத்தில், அந்த நாட்டில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவறுகள் ஏதேனும் செய்து தண்டனை பெற்றிருந்தால் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர முடியும்.
நீதிமன்ற நடவடிக்கை
சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களைக் கைது செய்யும் போது அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும். எனினும், அவர்கள் அந்த நாடுகளில் தவறுகள் செய்திருப்பதனால் அங்கு தண்டனை வழங்கப்பட்டதன் பின்னரே நீதிமன்ற நடவடிக்கை ஊடாக அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும்.

அதேபோன்று, இலங்கையில் தவறு செய்தவர்கள் வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டால் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும் எனினும், அதற்கு சில கால தாமதம் ஏற்படும்.
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சீன மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, இலங்கைக்குத் தேவையான யாரும் அந்த நாடுகளில் இருந்தால் அவருக்கான சிவப்பு அறிவித்தலையும் உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்