வவுனியாவிற்கு கடத்தவிருந்த மில்லியன் பெறுமதியான போதை மாத்திரைகள்
பத்து மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளை புத்தளம், கல்பிட்டியிலிருந்து வவுனியாவிற்கு கொண்டு சென்ற சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று (19.10.2025) வவுனியா, முண்டிமுருப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருவாடு கொண்டு செல்வதாகக் கூறி கெப் வண்டியொன்றினுள் மறைத்து வைத்து குறித்த போதை மாத்திரைகளை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட சோதனை
வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற கெப் வண்டியுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு வழங்குவதற்காக இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருவதாகவும் ஒவ்வொரு போதை மாத்திரையும் 300 ரூபாய்க்கு விற்க தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
