தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட பயங்கர போதைப்பொருட்கள் பறிமுதல்
தாய்லாந்திலிருந்து இலங்கைக்குச் சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்கள் அடங்கிய பெருந்தொகையை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பரிசுப் பொருட்களாக இறக்குமதி செய்யப்பட்ட மேசைப் பலகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பேலியகொடை பகுதியில் உள்ள சுங்கக் களஞ்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்தப் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மேசைப் பலகைகளின் உட்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
இதன்போது, 2,428 கிராம் கஞ்சாவும், 12,372 கிராம் ஹஷீஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் ராகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 24 மில்லியன் ரூபாய் எனவும், ஹஷீஸ் போதைப்பொருளின் பெறுமதி 133 மில்லியன் ரூபாய் எனவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில், பயணிகள் சேவைகள் பிரிவின் பிரதி சுங்கப் பணிப்பாளர் எம்.கே.ஆர். குமார தலைமையிலான அதிகாரிகள் இந்தப் போதைப்பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
சுங்கத் திணைக்களத்தின் பயணிகள் சேவைகள் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்தப் பறிமுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |