நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
புதிய இணைப்பு
க்ரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நாளை (28) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்காக அவர் நாளை (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் பல பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதிமன்ற விசாரணையில் குற்றப்பத் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதிகளுக்கு எதிரான 24 குற்றச்சாட்டுகளை இக் குற்றப்பத்திரிகைகள் உள்ளடக்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடுமையான நிதி மற்றும் பொருளாதாரக் குற்றங்களை விசாரிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற விசேட அமர்வின் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
பிணை மனுக்கள்
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம முன்பாக, இவ்வழக்கு தொடர்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது இலஞ்ச ஆணைக்குழுவால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், 2026 செப்டம்பர் 4 அன்று இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச, சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரது பிணை மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டு, அவரது விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டது.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருந்தாலும், 'கிருஷ்' ஒப்பந்தம் தொடர்பான ஒரு வழக்கின் காரணமாக அவர் இன்னும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முதல் இணைப்பு
எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்சவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |