இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆயிரம் கோடி பெறுமதியான போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 280 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை இந்தியாவின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
56 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் எனப்படும் குறித்த போதைப்பொருள் சென்னயைில் வைத்து கைப்பற்றப்பட்டதாகவும் இதனுடைய பெறுமதி இலங்கை ரூபாவில் ஆயிரம் கோடி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவரும், சென்னை பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் கைது
இதற்கு முன்னதாக கடந்த 10ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை போதை தடுப்புப்பிரிவு காவல்துறையினர் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கைது செய்தனர்.
அதேநேரம் அவரிடமிருந்து இரண்டு கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பூரில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து அந்த போதைப்பொருளை பெற்றதாக கூறினார்.
இதன் அடிப்படையில் அங்கு சென்ற போதை தடுப்புப்பிரிவு காவல்துறையினர் அக்பர் அலி என்பவரை கைது செய்ததுடன் அவர்கள் மொத்தமாக பதுக்கி வைத்திருந்த 54 கிலோ எடை கொண்ட குறித்த போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மியான்மரில் இருந்து
இதேவேளை குறித்த நபர்கள் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் போதைப்பொருளை விநியோகம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வருடம் மட்டும் இலங்கைக்கு கடத்த இருந்த 65 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 3,338 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |