அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் அரசியல் : நாளை தெரியப்போகும் முடிவு!
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe)மற்றும் பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்த(Keerthi Udawatta) ஆகியோரை நியமித்தமைக்கு எதிராக சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (14) சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் சட்டத்தரணி கீர்த்தி உடவத்த ஆகியோர் முறையே சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை மனுதாரர் திஸாநாயக்க கோரியுள்ளார்.
அனைத்து முடிவுகளும் சட்டத்தில் செல்லாது
மேலும், மே 12ஆம் திகதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் சட்டத்தில் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக செயற்குழுக் கூட்டம் சட்டவிரோதமான முறையில் கூட்டப்பட்டுள்ளதாகவும், எனவே அதன் பின்னர் வழங்கப்பட்ட நியமனங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்குமா
நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்குமா என்பது குறித்து நாளை (15) முடிவு எடுக்கப்படும்.
இதற்கிடையில், கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் கடந்த மே 13ஆம் திகதி கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |