தமிழர் பகுதியில் பதிவான நிலநடுக்கம்: எதிர்கால அழிவு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
புதிய இணைப்பு
இலங்கையில் அண்மைக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், அனர்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வை இலங்கையின்(Sri lanka) சகல பிரஜைகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா(Vavuniya) மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் நேற்றைய தினம் இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என் தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது.
பதிவான நிலநடுக்கம்
இந்த நில நடுக்கத்தின் குவிமையம் (Epic Centre) தாண்டிக்குளத்திற்கும் கூமாங்குளத்திற்கும் இடைப்பட்ட மரிக்காரம்பளையாகும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த குவி மையம் புவிமேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. இன்று காலை நான் இது தொடர்பாக இட்ட பதிவில் கருத்துரைத்த பலர் கல் அகழ்வுச் செயற்பாடுகள், மற்றும் குழாய்க்கிணறு தோண்டுதல் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலநடுக்கம் தோன்றியிருக்கலாம் என தெரிவித்தனர்.
ஆனால் புவி நடுக்கத்திற்கும் இவைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. வவுனியாவில் நிகழ்ந்த புவிநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.
எனினும், இந்த கல்லகழ்வு மற்றும் குழாய்க்கிணறுகள் புவி மேற்பரப்பில் இருந்து வெறுமனே 100 மீற்றருக்குள்ளேயே நிகழ்கின்றன என்பதுடன் இவை வேறுபல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
பொதுவாக எதிர்வு கூற முடியாத இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது. உலகின் பல பிரதேசங்களில் நிகழ்ந்த பாரிய புவி நடுக்க நிகழ்வுகள் இரண்டாகவே நிகழ்ந்துள்ளன.
முதலாவது மிக மெதுவானதாக வெறும் நடுக்கத்துடன் கூடியதாகவே அமைந்துள்ளது. இதனை உணர்ந்து கட்டுமானங்களை விட்டு வெளியே வந்து வெளிப்பிரதேசங்களில் நின்றால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது புவி நடுக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம்.
அச்சத்தில் மக்கள்
இலங்கையில் அண்மைக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன.
இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதலாம். அனர்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வை இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் வழங்க வேண்டும்.
குறிப்பாக வெள்ளப்பெருக்கு, வறட்சி, புயல், சூறாவளி, நிலச்சரிவு, புவிநடுக்கம் தொடர்பான இயற்கை அனர்த்தங்கள் பற்றியும் வீதி விபத்துக்கள் மற்றும் தீ விபத்துக்கள் பற்றியும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றினால் ஏற்படும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களை தவிர்க்க முடியும்" என அவர் தெரிவித்துள்ளார்.
முதல் இணைப்பு
வவுனியாவில் (Vavuniya) திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது நேற்று (18.6.2024) இரவு 10.55 முதல் 11.10 மணி வரை பதிவானதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க மையங்கள்
வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்லகெலே, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் ஐன்னல்கள், கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை தாம் உணர்ந்ததாக வவுனியா மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |