கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : திருப்பி விடப்பட்ட விமானம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரைக்கு அப்பால் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை (28) காலை 9.30 மணியளவில் மன்ஹாட்டன் கடற்கரைக்கு தென்மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலும், 12.2 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் ஒன்றில் கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதுடன், எச்சரிக்கை ஒலிகளும் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் தரையிறங்க வந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் உட்பட சில விமானங்கள் பாதுகாப்பு கருதி தரையிறங்குவதைத் தவிர்த்து மீண்டும் சிறிது நேரம் வானில் பறந்தன.

மேலும், சாண்டா மோனிகா பகுதியில் கட்டடங்கள் மற்றும் மரங்கள் அதிர்ந்ததால், அங்குள்ள வர்த்தக நிலையங்களில் இருந்த மக்கள் அச்சமடைந்து வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, கட்டடங்களின் கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை ஆரம்பகட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுனாமி அபாயம் இல்லை
கடந்த பல ஆண்டுகளில் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாக இது இருக்கலாம் என புவி இயற்பியல் நிபுணர் லூசி ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடனும் தயார்நிலையுடனும் இருக்குமாறு கலிபோர்னியா அவசரகால சேவைகள் அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |