ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்: மைத்திரி, கருணா, பிள்ளையான் மூடி மறைக்கும் உண்மைகள்
“ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன, கருணா அம்மான், பிள்ளையான் ஆகிய இவர்களுக்கிடையே ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது இவர்களை விசாரித்தால் உண்மை வெளிவரும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு, தேர்தல் நெருங்குகின்றது. தேர்தலுக்கான நாடகம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டு தருவதாக கூறி தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லோரையும் தன்பக்கம் திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்து அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெருமை செய்தவர்.
தேர்தல் நாடகம்
இப்போது அவர் ஒரு செயலணிபோட்டு குழு போட்டு செயற்படவந்துள்ளார். இது தேர்தலுக்காக மேற்கொள்ளும் ஒரு நாடகம் அவரது ஏமாற்று வேலை எல்லாம் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எனவே அவர் வடக்கு கிழக்கை இணைக்க தேவையில்லை அவர் சும்மா இருந்தால் போதும் எங்கள் மக்களுக்கு எதை பெறுவது என்று தெரியும் அதை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
அதேநேரத்தில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார்.
ஆனால் பிள்ளையான் இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் அதிபர் மைதிரிபால சிறிசேன காலத்தில் இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் அதிபர் பதவி இழந்து நீண்ட காலத்தின் பின் தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
தீவிரமான விசாரணை
ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் குற்றம் இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர் மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக ஆசாத் மௌலான பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தகம் வெளியிட்டுள்ளது தொடர்பாக கருணா அம்மான் கருத்து தெரிவித்துள்ளார்.
இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும், ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது.
எனவே இந்தக் கருத்துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் அதிபர் மைத்திபால சிறிசேன, கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாங்கம் கைது செய்யது சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார்.
இது யார் என்பதை அறிய முடியும். எனவே அதிபர் விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும் அதிபரையும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |