ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த ஜூலை 31ஆம் திகதி கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அடுத்து இந்த தேசிய சோகத்தின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
அனைத்து சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கியே திரும்பியுள்ளன.
268 அப்பாவி உயிர்களை பலிகொண்ட அந்த தாக்குதல் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின், இறுதி பொறுப்பாளி யார் ? என்ற கேள்விக்கு விடை காணும் நிலைக்கு நீதித்துறை வந்துள்ளது.
2019 முதல் 2026 வரை நடந்த விசாரணைகளில் மைத்திரி மீது முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
2021 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் படி, 2018 ஒக்டோபர் முதல் தாக்குதல் நடந்த 2019 ஏப்ரல் வரை ஜனாதிபதி மைத்திரி தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களை முறையாக கூட்டவில்லை.
இதனால் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய முக்கிய எச்சரிக்கைகள் கூட்டாக ஆராயப்படவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு கூட்டங்களுக்கு அழைக்காமல் தவிர்த்தமையும் நிர்வாகக் கோளாறு என ஆணைக்குழு கண்டித்தது.

தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 16ஆம் திகதி மைத்திரி தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றார்.
பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த அவர், நாட்டை விட்டு வெளியேறும் போது பதில் அமைச்சரை நியமிக்கவில்லை. இது அரசியலமைப்புக்கு விரோதமான தேசிய பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்திய நிர்வாகப் பொறுப்பற்ற செயல் என 2021 ஆணைக்குழு அறிக்கை குறிப்பிடுகிறது.
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
2023 ஜனவரி 12 உயர் நீதிமன்ற அடிப்படை உரிமை வழக்கு தீர்ப்பில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. ஹேமசிறி பெர்னாண்டோவின் வாக்குமூலம்:
“ஏப்ரல் 20 மாலை 5:30 மணிக்கு நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என தகவல் வழங்கினார்.
உடனடியாக சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி மைத்திரிக்கு வட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினேன். பதில் வரவில்லை.
இதையடுத்து உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்குதலை தடுக்கத் தவறி மக்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டார் என தீர்ப்பளித்து அவருக்கு ரூபாய் 100 மில்லியன் நட்டஈடு விதித்தது.

மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் 2026 ஜூலையில் ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் அளித்த வாக்குமூலம் மைத்திரி மீதான குற்றச்சாட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
தாக்குதலின் பின்னர் மேலும் சிலரைக் கைது செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது மைத்திரி என்னிடம், பூஜித் ஜயசுந்தரவையும் உன்னையும் மட்டும் கைது செய்தால் போதும். மற்றவர்கள் வேண்டாம் என நேரடியாக உத்தரவிட்டார்.”
அதே வாக்குமூலத்தில் நிலந்த ஜயவர்தன உயிர்த்த தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர். அவர் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் செயல்பட்டவர் எனவும் ஹேமசிறி குற்றம் சாட்டினார்.
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
புதிய விசாரணை
மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் இந்த வாக்குமூலங்கள் புதிய விசாரணைக்கு வழிவகுக்கும் என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர்.
சட்டத்தரணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "உயர் நீதிமன்றம் ஏற்கனவே சிவில் பொறுப்பை நிரூபித்துள்ளது. கடமை தவறுதல், நிர்வாக முறைகேடு, நீதிக்கு இடையூறு என குற்றவியல் விசாரணைக்கான அனைத்து அடிப்படைகளும் தற்போது தயாராக உள்ளன.

ஹேமசிறி, நிலந்த, CID என அனைத்து சாட்சியங்களும் ஜனாதிபதியின் முடிவு என்ற ஒரே புள்ளியில் குவிகின்றன" என தெரிவித்துள்ளார்.
268 உயிர்களின் இறுதி பொறுப்பாளி யார் என்ற கேள்விக்கு அரசியல் தலைமையின் பங்கு விசாரிக்கப்படாமல் நீதி முழுமையடையாது என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும், சட்ட சமூகத்தினதும் ஒருமித்த குரலாக உள்ளது.
இந்தநிலையில் அடுத்த விசாரணை மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே இருக்கும் என்பது தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |