அமெரிக்க விசாவுக்குக் கெடுபிடி அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு
ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்க விசா பெறும்போது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத்தொகையாகச் (Visa Bond) செலுத்த வகை செய்யும் விசா பிணைத்தொகைத் திட்டத்தை (Visa Bond Program) அமெரிக்க வெளியுறவுத்துறை நிரந்தரமாக்கியுள்ளது.
இது குறித்து வெளியான கூட்டாட்சிப் பதிவேட்டு (Federal Register) அறிவிப்பின்படி, இந்த விதிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன.
வியாபாரம் மற்றும் சுற்றுலாவுக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும்.
அதிகபட்சப் பிணைத்தொகை
விசா வழங்கும் நிபந்தனையாக குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களிடம் 20,000 டொலர் வரை பிணைத்தொகையைக் கோரும் அதிகாரம் விசா தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தில் (Pilot Program) $5,000, $10,000 மற்றும் $15,000 எனப் பிணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் புதிய நிரந்தர விதியின்படி, $5,000 தொகைக் கட்டணம் நீக்கப்பட்டு, அதிகபட்சப் பிணைத்தொகை $20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டம்
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 நாடுகளில் 30 நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

விசா அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தை மீறி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்குவதைத் (Visa Overstay) தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னோடித் திட்டத்தின் மூலம் கிடைத்த தரவுகள், இத்திட்டம் விசா விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யப் பயனுள்ளதாக இருப்பதை உணர்த்துவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பேச்சு சுதந்திரம்
இருப்பினும், இத்திட்டம் சட்டப்பூர்வப் பயணங்களை முடக்கும் எனச் சட்ட மற்றும் குடிவரவு ஆதரவாளர்கள் சாடியுள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடிவரவு நடவடிக்கைகள் பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதிப்பதுடன் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி இனப் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இருப்பினும், தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் அத்தியாவசியமானவை என ட்ரம்ப் தரப்பு நியாயப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |