விசாரணையை மூடி மறைக்கும் அநுர அரசு...! அம்பலப்படுத்தும் நாமல்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) சாடியுள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “கட்சி என்ற வகையில் நாம் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.
அரசியல் வங்குரோத்து நிலை
ஆனால், அரசாங்கம் தமது அரசியல் வங்குரோத்து நிலையை மறைக்கும் நோக்கில் அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. மறுபுறம் வேட்பாளர்களை அச்சுறுத்தும் விடயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தம்முடைய கட்சிக்கு வாக்களிக்கவில்லையாயின் குறித்த பிரதேச சபைக்கு நிதியை அனுப்ப முடியாது என்ற விடயத்தைக் கூறி ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கையும் முன் னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கம் ஒருபுறம் போலி வழக்குகளை தொடுக்கிறது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத தன்மையை மூடிமறைக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த விடயத்தை மேற்கொண்டு வருகிறது.
உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விடயத்தையும் கூட அரசியலாக்கும் விடயமே நடக்கிறது.
சூத்திரதாரியை வெளிப்படுத்தும் விடயத்திலும் கூட அரசாங்கத்தால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மூடி மறைத்து தம்முடைய அரசாங்கத்தில் உள்ளவர்களை பாதுகாக்க முயல்கிறது.
மக்கள் அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
