சுரேஷ் சாலேயின் அதிரடி கைது - அரசின் மீது பாயும் கடும் விமர்சனங்கள்
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் கைது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமாயின் தற்போதைய பாதுகாப்பு தரப்பில் உள்ள முக்கிய அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தத் திடீர் கைது நடவடிக்கை என்பது நாட்டில் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலக்கரி ஊழலை திசை திருப்புவதற்கான ஒரு முயற்சியே என எதிர்க்க தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முஜிபுர் ரஹ்மான்
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

'இன்று காலை சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அவர் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருந்தன.
அவர் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது. அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.
எனவே இந்த விசாரணையை சரியான முறையில் முன்னெடுப்பதற்கு அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
சுஜித் சஞ்சய பெரேரா
'நிலக்கரி மோசடியை மூடிமறைப்பதற்காகவே இப்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான கைதுகளின் மூலம் நிலக்கரி ஊழலை ஒருபோதும் மறைக்க முடியாது.
அரசாங்கம் இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |