இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்- மற்றுமொரு சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசீமுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மற்றுமொருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் சஹ்ரான் ஹாசீம் தற்கொலைத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சஹ்ரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நாடளாவிய ரீதியில் பலர் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 36 வயதான சந்தேக நபர் காத்தான் குடியை பிறப்பிடமாக கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.